Monday, May 13, 2013

மாரியம்மன் பாட்டு (தஞ்சாவூர்)

புன்னை நல்லூர் மாரியம்ம்மா
புவிதனையே காருமம்மா
தென்னை மரத் தோப்பிலம்மா
தேடியவர்க் கருளுமம்மா

வெள்ளைமனம் கொண்ட அம்மா
பிள்ளை வரம் தாரும் அம்மா
கள்ளமில்லாக் காளியம்மா
உள்ளமெல்லாம் நீயே அம்மா

கண்கண்ட தெய்வம் அம்மா
கண்நோயைத் தீர்த்திடம்மா
பெண் தெய்வம் நீயே அம்மா
பேரின்பம் அளித்திடம்மா

வேப்பிலையை அணிந்த அம்மா
வெப்பு நோயை நீக்கிடம்மா
காப்புதனை அணிந்த அம்மா
கொப்புளங்கள் ஆற்றிடம்மா

பாலாபிஷேகம் அம்மா
பாசத்தினைக் கொடுத்திடம்மா
காலார நடக்க வைத்தே
காலனையே விரட்டிடம்மா

ஆயிரம் பேர் கொண்ட அம்மா
நோயினின்று காத்திடம்மா
தாயினது பாசந்தன்னை
சேய் எனக்கு அருளிடம்மா

வேனில்கால வேளையம்மா (உந்தன்)
மேனிதன்னில் வேர்க்குதம்மா
இளநீரில் குளித்திடம்மா
இன்னருளை ஈந்திடம்ம்மா

தேனில் நன்கு குளித்திடம்மா
வானின் மீது உலவிடம்மா
வளமார வாழ்ந்திடம்மா
வாயார வாழ்த்திடம்மா

Sunday, December 16, 2012

ஏழுமலையான் துதி

ஏழு மலைவாசா ஜெய ஸ்ரீநிவாசா
ஏகாந்த சேவை தரும் ஏகஸ்வரூபா (ஏழு)

வைகுண்ட புரவாச வேங்கட ரமணா
வையகம் உய்யவே வந்தருள் புரிவாய் (ஏழு)

பாற்கடலுள் பள்ளி கொண்ட பரந்தாமனே
பாரினிலே பக்தர்களைக் காத்தருள்பவனே (ஏழு)

தினம் தினமும் அதிகாலை சுப்ரபாதத்துடன்
திவ்யமான தரிசனம் தந்து ரக்ஷிப்பவனே (ஏழு)

மக்கள் மனக்கவலைகளைக் கடிதினில் தீர்த்தே
மனமார உண்டியலை நிரப்பிக் கொள்பவனே (ஏழு)

கோவிந்தா கோவிந்தா என அழைப்போரை
கோலாகலமாய் வாழச்செய்திடும் ஹரியே (ஏழு)

நான்மறைகள் போற்றிடும் நாராயணா
நானுனது அடிமையாக நல்வரம் தருவாய் (ஏழு)

ஏழுமலை ஏறி வரும் எளியோரனைவரையும்
ஏற்றமாய் வாழவே செய்திடும் ஹரியே (ஏழு)

Thursday, February 16, 2012

சரஸ்வதி துதி

(குறத்தி மெட்டு)

அன்னமதில் அமர்ந்திருந்து அருள்புரிபவளே
அருங்கலைகள் அனைத்திற்கும் அன்னை நீயே
அன்னமதாய் வடிவெடுத்தோன் அருள் நாயகியே
அன்னையே அம்பிகையே சரஸ்வதி தேவி                               (அன்ன)

பாரதியைப் பாமாலை புனைந்திடச்செய்தாய்
பாரதியே உன் பாதம் சரணடைந்தேனே
பக்தியுடன் பரவசமாய்ப் பாடிடுவோரைப்
பல்லாண்டு வாழ்ந்திடவே செய்திடுவாயே                               (அன்ன)

வெள்ளைத் தாமரையில் கொலு வீற்றிருப்பாய்
வெள்ளை உள்ளம் கொள்ளவே செய்திடும் தாயே
கூத்தனூர் உறைகின்ற வீணா வாணியே
கூடிக்கூடி உன் பாதம் பணிந்திடச்செய்வாய்                               (அன்ன)

வீணையில் கானத்தை எழுப்பியே எந்தன்
வீணான சஞ்சலத்தைப போக்கிடும் தாயே
வித்தைகளைக் கற்றிடவே விழைந்திடுவோரை
விதம் விதமாய் அத்தனையும் கற்றிடச்செய்வாய்                   (அன்ன)

கண்ணிமைக்கும் நேரத்திலும் காட்சி தரும் தாயே
பண்ணிசைக்கும் திறம் தனையே எனக்களித்திடுவாய்
உண்மையாய் உன்னையே நம்பிடுவோரின்
எண்ணங்களை உளமார நிறைவேற்றிடுவாய்                           (அன்ன)

Sunday, February 12, 2012

சிவசக்தி அந்தாதி


நற்றவம் செய்தே நங்கையாய்ப் பிறந்தேன்
கற்றவர் பலருள் கருவியாய் இயங்கியே
பற்றற்று இருந்து ( சிவ)சக்தியைப் பாடிட
நற்றுணையாய் வா நர்த்தன கணபதி

மனமெலாம் உந்தன் நினைவிலே இருந்தவென்
கனவிலே தோன்றி நீ பாடவே பணித்தாய்
இனமிலா இன்பமே அடைந்த என் உள்ளத்தில்
நனவிலும் நின்றிடு அருள் சிவ கலையே

கலைமகள் அலைமகள் சாமரம் வீசிட
மலைமகள் லலிதை நீ நளினமாய் அமர்ந்திட
மலையுறை ஈசனும் மலருறை அயனும்
அலைகடல் அரங்கனும் களிப்பினில் மூழ்கவே 1

மூழ்கிய மலைதனை முதுகினில் தாங்கிய
ஆழ்கடல் அனந்தனின் அழகிய சோதரி
ஏழ்கடல் நடுங்கிடச்செய்திட்ட அசுரரை
வீழ்ந்திடச்செய்த ஸ்ரீ லலிதா தேவியே 2

தேவி நின் திருவடி அடைந்தே இப்பார்
மேவிய தேவரும் நலம் பல பெற்றனர்
காவியத்தளைவியாம் காமாட்சி அம்மையே
ஓவியந்தனிலே உமையே படைத்தேன் 3

படைக்கும் பிரமனுக்கும் காக்கும் மாலுக்கும்
கிடைக்காச்சோதியாய் மலைதனில் ஒளிர்ந்து
விடைக்கண் மேவிய விமலன் தேவி நின்
கடைக்கண் அருளை அடைந்தனர் பலரே 4

பலவாகி ஒன்றாகி ஒன்றுக்குள் அணுவாகி
அலகிலா அழகுடை அபிராமி வல்லியே
நிலமிசை வாழ்ந்திட்ட அபிராமி பட்டர்க்கு
நிலவிலா நாளிலே நிலவினைக்காட்டினாய் 5

காட்டிய மதியினை ஒத்த முகத்தினள்
தீட்டிடும் மையினை ஒத்த குழலினள்
ஊட்டிய அமுதை உண்ட சம்பந்தர்
ஈட்டினர் இறையருள் இசைந்து பாடவே 6

பாடல் வல்லவர் கூடும் மூதூர்
கூடல் மாநகர் கோவின் பாவாய்
கோடல் முத்தினைக் குருபரர்க்கு அளித்த
ஆடல் அழகியே அங்கயர்க் கண்ணியே 7

கண்ணின் மணியே மணியின் ஒளியே
விண்ணில் பறந்த வீரமாகாளியே
மண்ணை உண்ட கண்ணனின் சோதரி
எண்ணும்போதே என்னுள் உறைவாய் 8

உறைபனி நிறைந்திடும் மலைதனில் உறையும்
பிறைமதி அணிந்த பெம்மான் தேவியே
நிறைமணி விழாவினை விரும்பிடும் அன்னையே
குறைதனைத்தீர்த்திடும் குமரி நங்கையே 9

நங்கையின் நயனங்கள் நல்கும் அன்பினால்
பொங்கிடும் மங்களம் எங்கும் திண்ணமே
கங்கையைத்தரித்திடும் ஈசனின் சிவையே
பங்கயச்செல்வி நின் பதமலர் பணிந்தேன் 10

பணிந்தே பெற்றனன் மந்திர உபதேசம்
துணிந்தே உண்டனன் ஆலால விடந்தனை
தணிந்தே நிறுத்தினை விடந்தனைக்கண்டத்தில்
பணிந்தே ஏத்துவர் பலரும் நின் அடியினை 11

அடியேன் துயருறும் நேரத்தில் எல்லாம்
கடிதினில் வந்தெமைக்காத்திடும் ஈஸ்வரி
இடியென இன்னல்கள் வந்திடும் போழ்திலும்
வடிவுடை நாயகி காத்தே அருள்வாய் 12

அருள்மழை பொழிந்திடும் அகிலாண்ட நாயகி
கருணைமழை பொழிந்திடும் காமாட்சி தேவியே
ஞானமழை பொழிந்திடும் சரஸ்வதி தேவியே
கனகமழை பொழிந்திடும் லட்சுமியும் நீயே 13

நீயே கதியென நினைத்திடும்போதே
தாயே வந்து நீ தயைபுரிந்திடுவாய்
சேயேன் எனை நீ மறந்தே விடினும்
ஓயேன் உந்தன் மலரடி துதிப்பதை 14

துதி செய்திடவே (குரு) சங்கரர் அமைத்த
பதியாம் கொல்லூர் அதனில் பாயும்
நதியாம் சௌபர்ணிகைக் கரையில்
மதியென ஒளிர் மூகாம்பிகைத்தாயே 15

தாயாய் வந்தே தரிசனம் தந்தாய்
மாயாப்பிறவியை மாய்த்திடச்ச்செய்வாய்
சேயாய்ப்பிறந்தாய் இமயமலையிலே
பேயாய்த்திரிவோரை அடக்கிடவேன்றே 16

வென்றிடும் எண்ணத்தில் வந்த அசுரரைக்
கொன்றே குவித்தாய் குவலயந்தனிலே
நன்றியாய் தேவரும் பூமாரி பொழிந்திட
குன்றினில் அமர்ந்தாய் சாமுண்டி அன்னையே 17

அன்னை பராசக்தி அருளுள்ளம் கொண்டுநீ
தென்னைகமுகு நிறை தஞ்சை நகரிலே
புன்னை நல்லுரிலே பொலிவுடன் அமர்ந்தே
என்னை ரட்சிப்பாய் முத்து மாரியே 18

மாரியே பொய்ப்பினும் தான் என்றும் பொய்யாது
வாரியே வழங்கிடும் வண்டார் குழலியே
காரிருள் தன்னிலும் காத்திடும் நீயே
தேரினில் வருவாய் கருமாரி அம்மையே 19

அம்மையே என்று அழைத்திடும் போதிலே
வெம்மை நோயையும் தணிந்திடச்செய்வாய்
செம்மை நிறம் தனை விரும்பிடும் தேவியே
உம்மை என்றுமே உறுதியாய்ப் பற்றினேன் 20

பற்றிடும் வேளையில் பகலவனாய் வந்து
சுற்றமும் சுகமாய் வாழ்ந்த்திடச்செய்வாய்
கற்றிடும் யாவர்க்கும் கல்வியைக்கொடுத்திடு
நற்றமிழ் வாணியே லலித கலா மயிலே 21

மயிலாய்த் தோன்றி பூஜைகள் செய்தே
கயிலாயம் உறை ஈசனை மணந்து
மயிலாபுரியுறை மங்கயர்க்கரசியே
ஒயிலாய் வருவாய் கற்பகவல்லியே 22

வல்வினை நல்வினை ஆக்கிடும் தேவியே
மெல்லிடை மங்கையே தண்மதி அணிந்தே
கல்லினுட் தேரைக்கும் கனிவாய் அமுதூட்டும்
செல்வி நின் கருணைக்கு எல்லை இல்லையே 23

எல்லை இல்லாத எழில் மிகு ஈஸ்வரி
வில்லையொத்த புருவமுள்ளவள்
தில்லைக்கூத்தனின் சிவகாம சுந்தரி
நெல்லையில் வாழ் காந்திமதியே 24

மதியணி பிரானின் மனங்குளிர் நாயகி
பதியுடன் ரிடபத்தில் பவனி வரும் உனை
கதியென நினைக்கும் மானிடர் பலரின்
விதியினை வென்றிட வேகமாய் வருவாய் 25

வருவதை அறியாது வாடிடும் போது
கருவியாய் வந்தே அதனைக்களைவாய்
குருவாய் விளங்கும் குகனின் தாயே
திருவாய் மலர்ந்தே திறனை அளிப்பாய் 26

அளித்திடு எந்தனுக்கு ஆன்ம சக்தியை
களித்திடச்செய்திடும் நீயே நிலமாய்
வெளியாய் காற்றாய் நீராய் நெருப்பாய்
ஒளிர்வாய் ஒளியினைத் தந்திடுவாயே 27

தந்தேன் அபயம் என்றே உரைத்து
வந்தே அருகினில் அமர்ந்து விடம்மா
கந்தன் கணபதி அன்புத்தாயே
உந்தன் புகழை இயம்புதல் இயலுமோ 28

இயலாச்செயலையும் இயக்கிடச்செய்து உன்
தயவால் தருமமே தழைத்திடச்செய்தாய்
அயலார் வந்தெமை எதிர்த்திடும்போதே
புயலாய் அவர் தமை விரட்டியே விடுவாய் 29

விடு விடு விடுவென விரட்டிடுவோரையும்
சிடு சிடு சிடுவேனச்சீரிடுவோரையும்
கடு கடு கடுவென கர்ஜிப்போரையும்
நடு நடு நடுங்காமல் காத்திடு காளியே 30

காளியின் ரூபமாய் ஆதிபராசக்திநீ
யாளியின் மீதே அமர்ந்தே வருவாய்
கோளிலி எம்பெருமான் தேவியே
தாளினைப்பற்றினேன் தயாபரியே 31

பரிதனை நரியாக்கி நரிதனை பரியாக்கிய
விரிசடையோனின் வியன்மிகு நாயகி
திரிபுர சுந்தரி திவ்யஸ்வரூபிணி
கரிமுகத்தோனின் அன்னை பராசக்தி 32

சக்தியின் மலரடி சத்தியமாய்ப்பணிய
பக்தியும் பெருகிடும் பாவமும் விலகிடும்
முக்தியே கிடைத்திடும் மும்மலம் அகன்றிடும்
யுக்தியே வேண்டாம் சத்தியம் நம்பினேன் 33

நம்புவோர் அனைவரும் நற்கதி பெறுவர்
தும்புரு நாரதர் தேவரும் பணிந்ததால்
கொம்புடை மகிஷனைக் கொன்றே அழித்தனை
சம்புவின் சிவை மகிஷாசுர மர்த்தினி 34

மர்த்தினி மாதங்கி மாலினி சூலினி
வர்த்தினி வாராஹி வித்யாஸ்வரூபிணி
நர்த்தினி நந்தினி நாராயணி என
அர்ச்சிக்க நாமங்கள் பலப்பல கொண்டாய் 35

கொண்ட நாயகனின் உயிரைக்காக்கவே
கண்டந்தனிலே விடந்தனை நிறுத்தினாய்
கொண்டல் போன்ற கண்கள் பெற்றவளே
தொண்டை மண்டலமுறை காமட்சித்தாயே 37

காமனை எரித்திட்ட ஈசனின் சிவையே
வாமனன் சோதரி வஜ்ரேச்வரி நீ
சோமானவன் சொல் கேளாமலேதான்
கோமகன் தக்கன் யாகம் சென்றனை 38

சென்றவள் தனையே தகப்பனும் வருவாய்
என்றழையாமலே கர்வம் கொண்டவன்
நின்றதைக் கண்டனள் தாட்சாயணியும்
குன்றிய மனதுடன் குதித்தனள் (யாக) குண்டத்தில் 39


குண்டத்தினின்று தோன்றிய தேவிதான்
கொண்ட ஈசனை அடைய எண்ணிப்பூ
மண்டலந்தன்னில் தவமியற்றிட நீல
கண்டனும் மகிழ்ந்தே மணந்தார் மங்கையை


மங்கை தாடகை (மலர்) சாத்திடும் வேளையில்
கங்கையணி ஈசன் தன சிரம்தனை சாயத்தனன்     
குங்கிலியக்கலையர் அச்சிரம்தனை நிமிர்த்திய
எங்கள் செஞ்சடையோன் பெரிய நாயகியே

நாயகன் நாரணன் சோதரியே யான்
நேயமுடன் பல நன்மைகள் புரிந்திட்டு
தூய மனதுடன் நின்பதம் பணிந்திட
தீய வினைகள் அகற்றி அருளே

அருள் பெற்ற அடியவர் அனையோருக்கும்
பொருளினை ஈந்திடும் புவனேஸ்வரியே
இருளினை அகற்றிடும் இச்சா சக்தியே
மருள்வதை மாய்த்திடும் மாயா ரூபியே

ரூபமும் அரூபமும் ஆனவள் நீயே
கோப தாபங்களைத் தீர்த்திடுவாயே
சாப விமோசனம் பெற்றிடச்செய்தே
தாபம் விலக்கிடு பைரவித்தாயே

பைரவி ராகத்தை விரும்பியே கேட்பாய்
வைரம் வைடூரியம் முத்தும் அணிவாய்
வைரவி என்னும் பெயரும் கொண்டாய்
பைரவரும் உன் சந்நிதி காக்கவே

காக்கும் கரங்களால் கைகளைக்காத்திடு
நோக்கும் விழியினால் கண்களைக்காத்திடு
நீக்கமற நிற்கும் நீலாயதாட்சியே
ஏக்கம் மிகக்கொண்டேன் எதிரில் வந்திடு

வந்த நொடியிலே வறுமை அகற்றிடு
கந்தனின் தாயே கவலைகள் போக்கிடு
சொந்த பந்தமென்ற தளையை அகற்றிடு
எந்த நிலையிலும் (என்) அருகில் நின்றிடு

நின்ற கோலத்தில் நிம்மதி அளிப்பாய்
கன்று குணிலாய் எறிந்தவன் சோதரி
நன்று தீதென்று இல்லாதவளே நான்
என்றும் உந்தன் தாள் பணிந்திடுவேன்

வேத மெய்ப்பொருள் ஐந்தெழுத்தினை நீ
நாதனிடம் கற்க நினைத்தே ஈசனை
ஓதவே செய்தாய் காளத்தியிலே நின்
பாதமே (கதி) ஞானப்ப்ரசுன்னாம்பிகையே

அம்பிகை நீ அருள் பெற்ற தலந்தனில்
வெம்புலி பன்றி இவற்றினைக்கொன்றே
வெம்பசி ஆற்றிடும் வேடன் திண்ணனும்
நம்மையே ஆண்டிடும் ஈசனைக்கண்டனன்

கண்டதும் களிப்புடன் பன்றியைச்சமைத்து
துண்டங்களாக்கி சுவையும் பார்த்து
கண்டத்தில் நீரை நிரப்பிக்கொண்டு
அண்டினன் ஈசனின் இருப்பிடம் தனையே

இடபவாகனம் மேவிய ஈசர்க்கு
திடமுடன் அவ்வூனினைப் படைத்தனன்
கடவுளும் அதனை அன்புடன் ஏற்றனர்
கடமை மறந்தனன் வீடும் துறந்தனன்

துறந்த முனிபோல் ஒவ்வோர் தினமும்
பறந்து பறந்தே ஈசனை வணங்கினான்
சிறந்த பக்தனைசோதிக்க நீல
நிறமிடற்றோனும் மனதினில் கருதினார்

கருதிய செயலை முடித்திடக்கண்ணில்
குருதியை வடித்தார் காளத்தியப்பரும்
அருகிலே வந்து திண்ணனும் கண்டான்
பெருகும் குருதியை நிறுத்திடப் பார்த்தான்

பார்க்கும் வேளையில் குருதி நில்லாமையால்
யார்க்கும் தோன்றா மதியினால் தான்
பார்க்க இருக்கும் (தன) கண்கள் தனையே
வார்க்க அம்பினால் குத்தியே எடுத்தான்

எடுத்த கண்ணினை ஈசர்க்கு அப்பினான்
கொடுத்த கண்ணினால் குருதியும் நின்றது
அடுத்த கண்ணினில் குருதியைக்கண்ட தன
அடுத்த கண்ணையும் எடுக்க முயன்றான்

முயன்ற வேளையில் ஈசரும் அவனை
இயன்றதற்கு மேல் செய்தனை நீயென
வியந்தே நில்லு கண்ணப்ப என்றே
இயம்பிடத் திண்ணனும் கண்ணினைப்பெற்றான்

கண்ணினைப் பெற்ற திண்ணன் வேடனும்
கண்ணப்பர் ஆயினர் இத்தலந்தனிலே
விண்ணோர் கூறும் பஞ்சபூதங்களுள்
ஒண்ணாய் விளங்கிடும் வாயு இத்தலமே

இத்தலந்தனிலே முக்திபெற விழைந்த்திட்ட
அததியும் சிலந்தியும் காலமாம் பாம்பும்
எத்தினமும் ஈசனைக் காக்க எண்ணி
நித்தியப் பூசையால் முக்தியும் பெற்றன

முக்தி தந்திடும் பலப்பல தலங்களுள்
சக்தி பீடத்தில் ஒன்றாய் விளங்கிடும்
பக்தி மனதுடன் பலரும் வந்தே
சக்தியை வழிபடும் தலம் மாங்காடே

மாமரங்களடர்ந்த மாங்காட்டினிலே
காமனை அழித்த ஈசனின் நாயகி
வாமனன் நாரணன் நலம் மிகு சோதரி
சோமனை அடையவே தவமியற்றினளே

இயற்றிய தவத்தினை இயம்புதல் இயலுமோ
முயற்சியால் பஞ்சாக்னியை வளர்த்தே
புயலாய் வீசிடும் அக்னியில் காம
நயனங்கள் கொண்டவள் நின்றால் விரலினால்

விரலினால் நின்றே இயற்றிய தவத்தினை
அரவணி பிரானும் பார்த்தே மகிழ்ந்து
விரைவில் செல்வாய் காஞ்சி மாநகர்க்கென
அரனும் பணித்திடச் சென்றனள் கஞ்சிக்கே

கஞ்சி மாநகர் கவின்மிகு மூதூர்
கொஞ்சும் அழகுடன் ஒளிர்ந்திடும் ஓரூர்
பஞ்ச பூதங்களுள் பூமித்தலமாம்
நெஞ்சையள்ளும் பழம்பெரு நகரே

நகரேஷு காஞ்சியென காளிதாசன் புகழ்ந்த
நகரினில் வந்தே மாமரத்தடியினில்
நிகரிலாத் தவந்தனை பின்னும் தொடர்ந்ததை
பகரவே விழைந்து நினைத்தேன் மனதினில்

மனதினில் திடமுடன் ஈசனை மணக்கவே
சினமது இன்றியே சிவபக்தியினால்
கனமிலா மணலால் லிங்கமே அமைத்து
தினமும் பூஜையை அன்புடன் செய்தனள்

செய்த பூஜையில் மகிழ்ந்த ஈசனும்
பொய்கை நீரையே வெள்ளமாக்கினார்
செய்வதறியாது தவித்திடும் வேளையில்
உய்விக்க வந்தார் ஏகாம்பரனார்

ஏகாம்பரனார் எழிலுடன் வந்தே
ஏகாந்தமாய் நின்ற காமாட்சி தேவியை
பாகாய்க் கரையும் பரிவுடன் அன்பாய்
லோகாம்பிகையை மணமே புரிந்தார்

புவிதனில் ஷண்மதம் அமைத்த சங்கரர்
கவிகள் பலருடன் வாதம் புரிந்தவர்
கவின்மிகு சங்கரமடம்தனை அமைத்ததை
நவிலுதல் இங்கே அவசியம் அன்றோ

அம்புலி அணிந்தவன் அப்புவாய் அமர்ந்த
ஜம்புகேஸ்வரரின் அகிலாண்டேஸ்வரி நின்
வெம்மை தீரவே ஆதி சங்கரரும்
அம்மை எதிரிலே கணபதி அமைத்தார்

கணபதி மீது நீ கொண்ட அன்பினால்
குணமதில் குளிர்ச்சியைப் பெற்றவளாகியே
கணமதில் கருணையைப் பொழிந்திடும் தாயே
ருணமதைத் தீர்த்தே வைத்திடுவாயே

வானமும் பஞ்ச பூதங்களுள் ஒன்றாம்
வானாய் நின்றான் சிதம்பரம் தனிலே
மானும் மழுவும் ஏந்திய ஈசன்
கானமுடன் தாளத்திற்கு நடனமாடியே

நடம் புரிந்திடும் நடராசன் திருக்கோயில்
புடம்போட்ட பொன் வேய்ந்த கூரைக்கீழ்
படம் எடுத்திடும் பாம்பை அணிந்தவன்
விடம் உண்டவன் ஆனந்தமாய் ஆடினார்

ஆடிய பாதனின் அன்புடை சிவகாமி
நாடியவர்க்கு நன்மையே புரிந்து நீ
வாடிய பயிரினைக்காத்த்டும் தாய் போல்
கூடிடும்  பக்தரின் குறைதனைத் தீர்ப்பாய்

தீயாம் பஞ்ச பூதங்களுள் ஒன்றாம்
தீயாய் நின்றான் அண்ணாமலையில்
சேயாய் எண்ணியே மக்களைக்காத்திடும்
தாயாம் உண்ணாமலையம்மையுடன்

அம்மை அப்பனின் புகழ்தனைப் பாடியே
வெம்மை தணித்திடும் பௌர்ணமி நிலவிலே
உம்மைச்சுற்றியே கிரிவலம் வந்திடும்
எம்மையே நீர் ஏற்றருள்வீரே

அருவியாய்க் கருணை மழை பொழிந்திடும்
திருவுடைத் திருவண்ணாமலை தனிலே
மருவும் மலையில் உலவும் முனிவர்கள்
குருவாய் அமர்ந்தனர் பலரும் என்றுமே

என்றும் அழியாக் குருவருள் பெறவே
சென்றிடும் மலையாம் சோதியின் மலையில்
கன்றினைக்கண்ட தாயின் அன்பு போல்
சென்றவர்க்கருளும் ரமணாஸ்ரமமே

ஆஸ்ரமம் என்பது ஒன்றிலை இங்கே
ஈஸ்வரனின் அங்கமாய் அமைந்த
ஈஸ்வரியின் புதல்வாராய்ப் பிறந்தோர்
ஆஸ்ரம வாழ்க்கை வாழ்கின்றனரே

வாழ்வினில் பலவிதம் கண்ட அருணகிரி
பாழ்மனம் சஞ்சலம் அடைந்தபின் கீழே
வீழ்ந்திட இருந்தோனைக் காத்த முருகன்
ஆழ்ந்த ஞானத்தை அளித்தனன் அவர்க்கே

அளித்த ஞானத்தால் அருமையாய்ப் பாடினார்
தெளிந்த பக்தியால் பரவசமடைந்து
களித்து மகிழவே திருப்புகழ் தனையே
கிளியாய் அமர்ந்தார் கோபுர வாயிலில்

வாவென அழைத்திடும் போதே வந்து
காவெனக் கூப்பிடும் போதே காத்து
மாவேனக்கதரிடும் கன்றினையோத்த
சேய் எனக்கருவாய் திரிபுர சுந்தரி

திருவாரூர் வாழ் கமலாம்பிகையே
திருக்கருகாவூர் கர்ப்ப ரக்ஷாம்பிகையே
திருவையாற்றில் தர்மசம்வர்த்தினி
திருமீயச்சூரமை லலிதாம்பிகையே

அம்பிகை கௌரியும் கடுந்தவம் இயற்றிய
செம்மலை கொண்ட திருச்செங்கோட்டில்
நம்பிரான் நங்கையைப் பாகமாய்க் கொண்டே
உம்பரும் போற்றவே சைவச்க்தியானார்

சக்தியும் சிவனும் ஒன்றாய் இணைந்ததால்
சக்தியைப் பாடுங்கால் சிவனையும் பாடவே
சக்தியே தந்தது ஞானசக்தி அச்
சக்தியே நித்தமும் மக்களைக் காக்கும்

காக்கும் கடவுளர் அம்மையப்பனின்
நோக்கும் விழியினால் நோய்கள் அகன்றிடும்
தாக்கும் தாக்குதல் தன்மை நீங்கிடும்
வாக்கில் வளத்துடன் வன்மை அளித்திடும்

அருணன் இந்திரன் அம்புலி குபேரன்
வருணன் அனைவரும் வணங்கிடும் அன்னை
தருணம் வரும் வரை தயங்கி நிற்காமல்
கருணை உள்ளத்தால் காத்திடுவாயே

காத்திடும் கடவுளர் ஒன்றேயாயினும்
நேத்திரத்தாற்கண்டு பரவசமடைந்து
தோத்திரம் செய்து புண்ணியம் பெறவே
க்ஷேத்திரம் பலவும் தொன்றியதன்றோ

தோற்றம் அளித்திடும் ஈசனின் தலங்களில்
நாற்றம் மிகவுடை மலர்களால் அர்ச்சித்தே
மாற்றம் மனதினில் மிகுதியாய்ப் பெற்றே
ஏற்றம் பெறுவது மிகையிலை திண்ணமே

திண்ணமாய் இதனை நம்புவோர்க்கு முக்
கண்ணுடை ஈசனும் காமாட்சி அன்னையும்
எண்ணிலா நலன்களை இன்பமாய் நல்கியே
மண்ணினில் வாழவே செய்வர் வரத்தால்

வரமதால் புவிதனில் இறைவனின் புதல்வராய்
பரமதில் பரவிய அறுபத்து மூவரும்
சிரமதில் கங்கையைக் கொண்ட ஒருவனே
பரமென எண்ணியே அப்பனைப் பாடினர்

அப்பரும் பாடினார் அரனைப் போற்றியே
செப்பரும் தமிழிலே இசைநயத்துடன்
முப்புரம் எரித்த சிவனைப் பாடிட
அப்புரமமைந்த அம்மையும் அருளினள்

அன்று தடுத்தாட் கொளப்பட்ட சுந்தரர்
நின்று பாடினார் திருவொற்றியூர் தனில்
கொன்றை அணிந்த பிரானின் சந்நிதியில்
நன்று மணம் புரிந்தார் சங்கிலி தனையே

சங்காபிஷேகம் தனை விரும்பிடும் நாயகன்
கங்கையணிந்தவன் புகழைப் பாடினார்
மங்காப் புகழெய்திய மணிவாசகரும்
செங்கலும் உருகிடும் திருவாசகந்தனை

தனக்கமுதூட்டியதாரேன் தந்தை வினவ
எனக்கமுதூட்டியது தோடுடைய செவியன் என
மனக்களிப்புடன் பாடிய சம்பந்தர்
தினம் தினம் ஈசனைப் பாடியே மகிழ்ந்தார்

பாடுவர் ஆடுவர் பரமனை அடையவே
நாடுவர் அவனது இணையடி நீழலே
தேடுவர் அவனிடம் ஞானத்தைப் பெறவே
கூடுவர்  கோயிலில் தம் வினை தீரவே

தீராப் பசியினைத்தீர்த்திடும் எண்ணத்தில்
தாராளமாய் அளித்திடும் அன்னத்தை
ஏராளமாய் கோயிலில் வழங்கியே
பேரானந்தம் அடைந்திடுவார்களே

வாழ்வினில் வளம்பெற எண்ணுவோர் கோயிலில்
தாழ்மையுடன் பல தொண்டுகள் செய்து
ஊழ்வினை தீர்ந்து உய்வும் பெற்று
ஏழ்மையும் நீங்கி எழிலுடன் விளங்குவர்

விளக்கினை எரித்திட எண்ணையும் நல்கி
விளக்கமாய் ஆன்மிக நல்லுரையாற்றி
குளத்தினை எப்போதும் தூய்மையாய் வைத்தே
வளத்துடன் நீடூழி வாழ்வார் வையத்துள்

வைகறை நீராடி நல்லாடை உடுத்தி
மெய்யில் முழுவதும் திருநீறு பூசி
கையில் கற்பூரம் பூ பழம் கொண்டு
ஐயன் இணையடி தொழுதிடச்செல்வோம்

செல்வம் நற்குணம் திருவருள் பெற்று
கல்வி கேள்விகளில் திறமையும் பெற்று
நல்லோர் பலரின் ஆசியும் பெற்றே
பல்லாண்டு பல்லாண்டு புவிதனில் வாழ்க

Tuesday, January 24, 2012

சக்தி தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
கண்ணான கண்மணியோ
கரும்பான செங்கரும்போ
முத்தோ ரத்தினமோ
மோகனப் புன்னகையோ
முத்துச்சரத் தொட்டிலிலே
முக்கண்ணியே நீ உறங்காய்                    1

சிங்கார நெத்தியிலே
சிவப்புச்சுட்டி அணிந்த்தாயோ
தங்கமான காலினிலே
தண்டை கொலுசு அணிந்தாயோ
முத்தான மார்பினிலே
முத்துச்சரம் அணிந்தாயோ
கெம்பு பதித்த தொட்டிலிலே
கெளரியே நீ உறங்காய்                               2

வைரம் போன்ற கைகளிலே
வைரவளை அணிந்த்தாயோ
மடல் போன்ற காதினிலே
பிச்சோலை அணிந்தாயோ
மங்கை உந்தன் கழுத்தினிலே
கருகமணி அணிந்தாயோ
வைரம் பதித்த தொட்டிலிலே
வைஷ்ணவியே நீ உறங்காய்                   3

கொடி போன்ற இடையினிலே
ஒட்யாணம் அணிந்தாயோ
பட்டான மேனியிலே
பட்டாடை உடுத்தாயோ
எடுப்பான மூக்கினிலே
நத்து புல்லாக்கு அணிந்தாயோ
வைடூரியம் பதித்த தொட்டிலிலே
வைதேகியே நீ உறங்காய்                          4

சக்தியைக் கொடுக்கவே
சக்தியாய்ப் பிறந்தாயோ
ஞானத்தை அளிக்கவே
வாணியாய்ப் பிறந்தாயோ
கருணையைப் பொழியவே
காமாட்சியாய்ப் பிறந்தாயோ
பவளம் பதித்த தொட்டிலிலே
பார்வதியே நீ உறங்காய்                             5

ஐஸ்வர்யம் அளிக்கவே
அஷ்டலக்ஷ்மியாய்ப் பிறந்தாயோ
துன்பம் துடைக்கவே
துர்க்கையாய்ப் பிறந்தாயோ
கஷ்டங்கள் போக்கவே
காளியாய்ப் பிறந்தாயோ
மரகதத் தொட்டிலிலே
மரகதமே நீ உறங்காய்                                6

என் சிந்தை குளிரவே
ஸ்ரீ சக்ரத்தில் அமர்ந்தாயோ
காமேஸ்வரரை மணக்கவே
காமேச்வ்ரியாய்ப் பிறந்தாயோ
அசுரர்களை அழிக்கவே
லலிதையாய்ப் பிறந்தாயோ
கோமேதகத் தொட்டிலிலே
கோமதியே நீ உறங்காய்                            7

எங்கள் குலக்கொழுந்தாய்
எங்களிடம் பிறந்தாயோ
பால் வடியும் உன் முகத்தைப்
பார்த்தே பசி தீர்ந்திடுவேன்
உன் கருணை விழிகளினால்
கவலைகள் மறந்திடுவேன்
நீலம் பதித்த தொட்டிலிலே
நீலாயதாட்சி நீ உறங்காய்                          8

ஒளிதரும் உன் கண்களிலே
மை தீட்டி மகிழ்ந்திடுவேன்
சாந்தமான முகத்தினிலே
சாந்துப் போட்டும் இட்டிடுவேன்
என் கண்ணே பட்டிடாமல்
திருஷ்டியும் கழித்திடுவேன்
கனகரத்னத் தொட்டிலிலே
கனக துர்க்கையே நீ உறங்காய்                9

Wednesday, January 18, 2012

வடிவுடை அம்மன் அக்ஷர புஷ்பமாலை



          சென்னை மாநகரில் வடசென்னையில் அமைந்துள்ள ஊர் திருவொற்றியூர் எனும் திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் உறையும் இறைவி அருள்மிகு வடிவுடையம்மனின் மீது பாடல் எழுதக்கனவில் தோன்றியது. ஆகவே ' அ ' முதல் ' வ ' வரையிலான எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு அக்ஷர புஷ்ப மாலை பாட முனைந்தேன். அம்மனின்  அருட்பார்வையாலும், ஈசனின் அருளாலும் என்னால் இயன்றவரை எழுதி உள்ளேன். பிழைகள் இருப்பினும் ஈஸ்வரியை மனதில் நினைந்து அம்மனின் திருவடியில் சமர்ப்பித்து இதனைப் படிப்பவர்களுக்கு வேண்டுவன நல்க வேண்டுமென்று சிரம் தாழ்த்தி உமையம்மையை வேண்டுகின்றேன். குறைகளைக் களைய முன் வருவோரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள விழைகிறேன்.

- சாந்தா ஸ்ரீநிவாசன்    


கணபதி காப்பு

கொடியிடையுடையவள் கொழுமலரனையவள்
வடிவழகுடையவள் வடிவுடையம்மனின்
வடிவினை வருணித்து வரிகளில் பாடிட
கடிகணபதியே காத்து நீ யருள்வாய்

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
          அகிலாண்ட நாயகியே
அழுத பிள்ளைக்கு அமுதூட்டிய
          அருளுடை அம்பிகையே
அறம்வளர்த்த நாயகி அபிராமவல்லி நீ
          அங்கயர்க்கண்ணியும் நீ
அடியேன் உனைப்பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

ஆதியந்தமிலா ஆதிபராசக்தி நீ
          ஆனந்தவல்லியும் நீ
ஆதிசங்கரர் அமைத்த அர்த்த மேருவினில்
          ஆட்சி செய்பவள் நீயே
ஆறாத்துயரெல்லாம் ஆற்றி அருள்கின்ற
          ஆதிசக்தி நீயே
ஆட்கொளம்மா எனை ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடியம்மையே

இந்திராக்ஷிநீ இமவான் மகளும் நீ
          இந்து சீதளை நீயே
இந்த ஜன்மத்தில் இருவினை களைந்திடும்
          இந்து மதியும் நீயே
இன்னல் இருள் அகற்றி இன்பம் நல்கிடும்
          இச்சா சக்தி நீயே
இருபாதம் சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

ஈசரொடு பாகமாய் இணைந்திட்ட ஈஸ்வரியே
          ஈரேழுலகுக்கும் அன்னை நீயே
ஈராறு கண்ணினனை  ஈன்றெடுத்த தாயும்நீ
          ஈடிணை அற்றவளும் நீயே
ஈனகுணம்உள்ளவரையும் ஈ எறும்பு மற்றவையையும்
          ஈஸ்வரியே காத்திடம்மா
ஈண்டு உனை சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

உம்பரும் உய்யவே உறுதியுடன் போரிட்ட
          உமையம்மையும் நீயே
உந்தன் புகழ் பாடிடவே ஒருக்காலும் உறங்காமல்
          உன்மத்தன் ஆனேனம்மா
உன்னழகை வருணிக்க உபமானம் உண்டோ சொல்
          உலகத்து நாயகியே
உனை நாடி சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

ஊனக்கண் உள்ளவர்க்கும் ஒளிக்கண்ணை கொடுத்திடம்மா
          ஊழ்வினைகள் தீர்த்திடம்மா
ஊரெல்லாம் உன்பேரை உரக்கவே ஒலித்த்திடுவேன்
          ஊஞ்சலில் ஆடிவாம்மா
ஊசிமுனையில் தவம் செய்யும் மாங்காட்டு காமாட்சி
          ஊர்பயத்தை விரட்டிடம்மா
ஊன்றிடம்மா என் மனதில் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

எங்கும் நிறைந்திருந்து எங்களைக்காத்திடம்மா
          எமபயம் நீக்கிடம்மா
எல்லையில்லா துயரமுறும் ஏழை எளியோரையும்
          எழிலுடன் காத்திடம்மா
எண்ணிலா எதிரிகள் எங்கெங்கு வந்தாலும்
          எல்லையைக்காத்திடம்மா
எனையாளும் ஈஸ்வரியே ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

ஏகாந்தமானவளே ஏகாம்பரர் நாயகியே
          ஏறுமயிலோன் அன்னை நீயே
ஏழுஸ்வரங்களின் இசையில் மயங்குகின்ற
          ஏகாந்த வல்லி நீயே
ஏங்கிடும் எந்தனின் எண்ணிலா நிலைகளை
          ஏட்டினில் எழுதினேனம்மா
ஏழை என்மீதிரங்கு ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே
          ஐஸ்வர்யம் அளித்திடம்மா
ஐயாற்றில் உறைந்திடும் அறம் வளர்த்தநாயகி
          ஐயங்கள் தீர்த்திடம்மா
ஐம்பத்தோர் பீடத்தில் அரசாட்சி செலுத்திடும்
          ஐம் எனும் ஒலியினளே
ஐக்கியமானேன் நான் ஒற்றியூர் வாழ்கின்ற
           அழகு மிகு வடிவுடையம்மையே

ஒன்றாகிப்பலவாகி ஒவ்வொன்றுகுள்ளேயும்
          ஒளிர்கின்ற ஒளியும் நீயே
ஒட்டியாணம்  ஒலிக்கின்ற தண்டை சலங்கையுடன்
          ஒய்யாரமாய் வந்திடம்மா
ஒப்புமை இல்லாது ஒளிர்கின்ற ஓவியமே
          ஒழுக்கத்தை அளித்திடம்மா
ஒருக்காலும் உனை மறவேன் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

ஓங்கார நாயகி ஒம்சக்தித்தாயும் நீ
          ஒஜோவதியும் நீயே
ஓங்காரேச்வரரின் ஒளிர்மிகுநாயகி
          ஓடோடி வந்திடம்மா
ஓசையாசை எனும் உலகியல் மாயை தனை
          ஓட்டினுள் ஒடுக்கிடம்மா
ஓடியுனை சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

ஔஷதமும்   நீ ஔபாஸநமும் நீ
          சௌந்தர்ய நாயகியே
கெளரி சுந்தரி சங்கரி சாம்பவி
          சௌபாக்கியம் தந்திடம்மா
பௌர்ணமி பூஜையில் பலன் பல அருளிடும்
          கௌமாரியே எனக்கு
மௌனத்தை அளித்திடு ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

கவின்மிகு நாயகி கண்ணனின் சோதரி
          கண்ணினைக்காத்திடம்மா
கற்பகவல்லிநீ கண்கண்ட தெய்வம்நீ
          கதம்பவனவாசினி நீ
கனக துர்க்கையே கன்யா குமரியே
          கனிவுடன் வந்திடம்மா
களித்து எனை ஆதரி ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

காஞ்சி காமாட்சி காசி விசாலாக்ஷி
          காத்தே ரட்சிப்பாய்
காமேஸ்வரியே காதம்பரியே
          காட்சியே தந்திடுவாய்
காந்திமதியே காளிகாம்பாளே
          காலனை விரட்டிடுவாய்
காலடி பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

சங்கரி சாம்பவி சாரதா தேவிநீ
          சகலமும் அளித்திடம்மா
சங்கடம் தீர்த்திடும் சாவித்திரி தேவியே
          சடுதியில் வந்திடுவாய்
சண்ட முண்டரை சமரினில் அழித்திட்ட
          சாமுண்டீஸ்வரியே
சரணடைந்தேன் நான் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

ஞாலம் போற்றிடும் ஞானஸ்வரூபியே
          ஞானப்ரசுன்னாம்பிகையே
ஞானிகள் வலம் வரும் அண்ணாமலையில்
          ஞானியாய் உறைபவளே
ஞானேந்திரியங்கள் நலமாய் இயங்கிட
          ஞாயிறாய் வந்திடம்மா
ஞானத்தை வேண்டினேன் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

டம் டம் டம் என டமரு அசைத்திடும்
           தாண்டவன்  நாயகியே
டண் டண் டண் என தண்டை ஒலித்திட
          தண்மதி நீ வருவாய்
டங்கார ஒலிக்கே நாட்டியமாடிடும்
          நடன கலா மயிலே
தன்னடி பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

தக்ஷனின் புதல்வி தாக்ஷாயணி நீ
          தர்மத்தைக்காத்திடுவாய்
தவளேஸ்வரி நீ தர்மசம்வர்த்தனி
          தரிசனம் தந்திடுவாய்
தங்க ரேகையுடன் லிங்க ஸ்வரூபியே
          தண்ணொளி கொண்டவளே
தரித்தேன் உன் குங்குமம் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

நஞ்சுண்டோனின் நலம் மிகு நாயகி
          நன்மையே புரிந்திடுவாய்
நாவினில் வாக்கினில் நல்மொழி நல்கி
          நற்கதி அளித்திடுவாய்
நானிலந்தனிலே தொடர்ந்திடும் ஊழ்வினை
          நல்வினையாக்கிடுவாய்
நானுனைப்பிரியேன் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

பங்கயச்செல்வி பரிமளவல்லி நீ
          பவளவாய்க்குமரியும் நீ
பண்டாசுரனை வதைத்த தேவியே
          பயமதை அகற்றிடுவாய்
பனிமலை அரசி நீ பர்வதவர்த்தினி
          பாரத்தைப் போக்கிடுவாய்
பதமலர் பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

மணமகன் சுந்தரர் மணமகள் சங்கிலி
          மணந்தனை முடித்தவளே
மங்களநாயகி மரகதவல்லி நீ
          மாங்கல்யம் தந்திடுவாய்
மகிழடி சேவையில் மனம் மிக மகிழ்ந்த்திட்டே
          மக்களைக்காத்திடுவாய்
மறந்திடேன் உந்தனை ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

யானை முகத்தவன் அன்னை பராசக்தி
          யாதுமாகி நின்றாய்
யானை பூஜித்த தலமதில் உறைந்திடும்
          யோக நாயகியே
யாகம் பல புரிந்த தேவரைக்காத்திட்ட
          யக்னேஸ்வரி நீயே
யானுனைப்பிரியேன் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

ரஞ்சனி நிரஞ்சனி மஞ்சுள பாஷிணி
          ராஜராஜேஸ்வரி நீ
ரக்த பீஜனின் ரத்தத்தை உறிஞ்சிய
          ராஜமாகாளியும் நீ
ரத்னம் முத்துக்கள் பவளம் பதித்திட்ட
          ரதத்தினில்  வந்திடுவாய்
ரசித்தேன் உன்னழகை ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

லலிதா தேவியே லாவண்ய ரூபியே
          லலித கலாநிலையே
லட்சுமி பதியாம் நாராயணனின்
          லயம்மிகு சோதரியே
லங்கேஸ்வரனும் பூஜித்தவராம்
          லலாடாக்ஷர் சிவையே
லயித்தேன் உன்னிடம் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

வள்ளி மணாளர்க்கு வேல் தந்த அன்னையே
          வரமதை அளித்திடுவாய்
வல்வினை வந்தெமை வாட்டிடும் போது
          வலிமையைத்தந்திடுவாய்
வல்லார் பொல்லார் வஞ்சனை மாற்றிட
          வல்லமை தந்திடுவாய்
வந்துனை அடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
          அழகு மிகு வடிவுடையம்மையே

Tuesday, January 17, 2012

சிவபிரானின் 108 போற்றி



அலகில் சோதியனே போற்றி
அர்த்த நாரிசனே போற்றி
அருணாசலனே போற்றி
அம்பலவாணனே போற்றி
ஆலவாய் அழகனே போற்றி
ஆடிய பாதமே போற்றி
ஆனந்த்க்கூத்தனே போற்றி
இடபவாகனனே போற்றி
இடர்தனைத்தீர்ப்பவனே போற்றி
ஈசனே போற்றி                                                     10

ஈங்கோய்மலை நாதனே போற்றி
உயிரே போற்றி
உடலே போற்றி
உலகநாதனே போற்றி
உமையாள்பாகனே போற்றி
ஊர்த்துவத் தாண்டவனே போற்றி
ஊனைப்படைத்தோனுக்கும் அருள்பவனே போற்றி
எந்தையே போற்றி
எமபயம் தீர்ப்பவனே போற்றி
ஏகாந்தமானவனே போற்றி                                 20

எகாம்பரநாதனே போற்றி
ஐங்கரன் தந்தையே போற்றி
ஐந்தொழில் புரிபவனே போற்றி
ஒளியே போற்றி
ஒலியே போற்றி
ஓம் சக்தி நாதனே போற்றி
ஓங்கார நாதனே போற்றி
ஔடதமே போற்றி
ஔவைக்கருள் செய்தவளே போற்றி
கலையே போற்றி                                                30

கடலே போற்றி
கருவே போற்றி
கனலே போற்றி
கங்காதரனே போற்றி
கைலாசநாதனே போற்றி
காலகண்டனே போற்றி
காமாட்சிப்ரியனே போற்றி
குருவே போற்றி
குவலயமே போற்றி
குஞ்சிதபாதனே போற்றி                                      40

சடைமுடியோனே போற்றி
சட்டநாதனே போற்றி
சரபமாய்த்தோன்றியவனே போற்றி
சண்முகன் தந்தையே போற்றி
சச்சிதானந்தனே போற்றி
சத்குருவே போற்றி
சங்கரனே போற்றி
சிவனே போற்றி
சீலமே போற்றி
சோதியே போற்றி                                                  50

சுடரே போற்றி
சைலநாதனே போற்றி
சேய்தனைக்காப்பவனே போற்றி
சிதம்பரனாதனே போற்றி
சிவகாமி மணாளனே போற்றி
தருவே போற்றி
தகவே போற்றி
தண்ணொளியே போற்றி
தயாபரனே போற்றி
தாண்டவமூர்த்தியே போற்றி                               60

தாட்சாயணி நாதனே போற்றி
திங்களைத்தரித்தவனே போற்றி
திரிபுரம் எரித்தவனே போற்றி
நிதியே போற்றி
நிமலனே போற்றி
நீலகண்டனே போற்றி
நீலாயதாட்சி நாதனே போற்றி
நீல்விழியாள் நாதனே போற்றி
நீங்காத நினைவே போற்றி
நீர்மலிவேணியனே போற்றி                                 70

நீள்சடையோனே போற்றி
நெற்றிக்கண்ணனே போற்றி
நேசமாய்த்திகழ்பவனே போற்றி
பசுபதியே போற்றி
பனிமலையே போற்றி
பரம்பொருளே போற்றி
பருப்பொருளே போற்றி
பார்வதி நாதனே போற்றி
புலித்தோல் அணிந்தவனே போற்றி
பிட்டுக்கு மண் சுமந்தவனே போற்றி                  80

பிணியைத்தீர்ப்பவனே போற்றி
மஞ்சு நாதனே போற்றி
மணிகண்டன் தந்தையே போற்றி
மலைமகள் நாயகனே போற்றி
மன்மதனை எரித்தவனே போற்றி
மால்மருகன் தந்தையே போற்றி
மல்லிகார்ஜுனனே போற்றி
முதலே போற்றி
முடிவே போற்றி
முக்கண்ணனே போற்றி                                        90

முடியடி காணா முதல்வனே போற்றி
மேருவே போற்றி
மேகநாதனே போற்றி
மோனமே போற்றி
மோட்சமளிப்பவனே போற்றி
வளர்பிறை அணிந்தவனே போற்றி
வன்மீகனாதனே போற்றி
வாஞ்சினாதனே போற்றி
விடமுண்ட கண்டனே போற்றி
விஸ்வநாதனே போற்றி                                     100

வைத்யனாதனே போற்றி
வீரமே போற்றி
வெற்றியே போற்றி
வெண்மதி தரித்தவனே போற்றி
வேதமே போற்றி
வேள்வியே போற்றி
வேல்முருகன் தந்தையே போற்றி
வேண்டும் வரம் அருள்பவனே போற்றி           108

போற்றி போற்றி